உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிராக பாரிய ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான “ஊழல்வாதிகள், மோசடி செய்பவர்கள் மற்றும் திருடர்கள்” நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தஸ்து அல்லது செல்வாக்கைக் கருத்திற் கொள்ளாமல் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள் என அவர் வலியுறுத்தினார். நீதியை நிலைநாட்டும் போது, சந்தேக நபர்கள் “முன்னாள் ஜனாதிபதிகளா, மனைவிகளா, மகன்களா அல்லது வேறு ஏதேனும் உறவினர்களா” என்று அதிகாரிகள் பார்க்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, சட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட உள்ளதாக வெளிப்படுத்திய அவர், இந்த மாத காலப்பகுதியில் ஊழல் தொடர்பான 10 வழக்குகளும், 5 குற்றவியல் வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்