உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மே தின பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
“இன்று ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாயாகும். ஆனால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக அரசாங்கம் லீற்றருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதால், நுகர்வோர் அதனை 382 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடிகிறது,” என அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும், எரிபொருள் மானியத்தைப் பேணுவதற்காக அரசாங்கம் 60 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் சில திருத்தங்களைச் செய்வது அவசியமாகலாம் என்ற போதிலும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.
“இருப்பினும், விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சிறிய அளவிலான எரிபொருள் விலை அதிகரிப்புகளை நாங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம், ஆனால் அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் உழைத்து வருகிறோம். எரிசக்தி துறையில் நெருக்கடி உள்ளது; நிலக்கரி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன,” என்று அவர் கூறினார்.
மின்சாரத் துறையில் உள்ள சவால்கள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளமை மின் உற்பத்திச் செலவில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், 96 சதவீத மின் நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் இன்றி மின்சார மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்காக 15 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.