சென்னை
சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு ‘நல்ல சாவு வராது’ எனச் சாபமிட்டுப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என அத்தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு:
முன்னதாகச் சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் வாக்களித்துத் தானே தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றது? அந்த வகையில் தவெகவிற்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது. இனிமேல் திமுகவினர் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்; கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு நாம் ஓய்வெடுப்போம்,” என்று மிகக் கீழ்த்தரமாகச் சாபமிட்டுப் பேசியிருந்தார்.
“திமுகவின் மக்கள் விரோதப் போக்கு”:
ஆர்.எஸ்.பாரதியின் இந்தப் பேச்சைக் கண்டித்துத் தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசம் விடுத்துள்ள அறிக்கையில், “ஜனநாயக முறைப்படி தங்களின் உரிமையை நிலைநாட்டித் தீர்ப்பளித்த சைதாப்பேட்டை மக்களை, ‘நல்ல சாவு வராது’ என ஆர்.எஸ். பாரதி தரம் தாழ்ந்து பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்த மக்கள் நலப்பணிகளை உபகாரமாக நினைப்பதும், ஓட்டு போடாத மக்களைப் பழிவாங்கும் நோக்கில் பேசுவதும் திமுகவின் மக்கள் விரோதப் போக்கையே அப்பட்டமாகக் காட்டுகிறது,” என்று சாடியுள்ளார்.
“சுயமரியாதையில் சமரசம் இல்லை”:
மேலும் அவர் கூறுகையில், “சைதாப்பேட்டை மக்களின் நலனிலும், அவர்களின் சுயமரியாதையிலும் நாங்கள் எள்முனையளவும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். மக்கள் பணிக்கு ஓய்வு கொடுக்க நினைக்கும் கூட்டத்திற்கு மத்தியில், எங்கள் தலைவர் தளபதியின் வழியில் தொகுதி மக்களுக்கு என்றும் உண்மையாகவும் அரணாகவும் நின்று தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
#RSBharathi #ArulPrakasham #Saidapet #TVKMLA #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #DMK #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates