வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் சடலத்தை இனம் தெரியாத கும்பல் ஒன்று தோண்டி எடுத்து, அதன் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தார். அவரது சடலம் கருப்பணிச்சான்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மயானத்தில் அண்மையில் வேறொரு இறுதிச்சடங்கு நடந்தபோது, அங்கிருந்து வீசிய துர்நாற்றத்தை அடுத்து மக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, தலை இல்லாத நிலையில் உடல் மட்டும் வெளியில் வீசப்பட்டிருப்பதை மக்கள் கண்டறிந்தனர்.
பில்லி சூனியம் அல்லது புதையல் எடுக்கும் நோக்கில், அகால மரணமடைந்த இளைஞர்களின் தலைகளைப் பயன்படுத்திப் பூஜை செய்யும் கும்பல் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.