நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுக்கையில்,
வவுனியா – தெற்கு தமிழ் பிரதேச சபையினுடைய செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை பெற்று சமூக வலைத்தளங்களில் சில ஊடகங்கள் தவறான வழியிலே பிரசுரித்து வருகின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் குறித்த ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக எங்கள் மீது சொகுசு வாகன வாழ்க்கை வாழ்வதாக ஒரு குற்றச்சாட்டினை மேற்கொண்டிருந்தனர். நாங்கள் சொகுசு வாகனம் ஒன்று வேண்டும் என கேள்வி கோரலினை மேற்கொள்ளவில்லை. மாறாக சபையின் வேலைக்கு ஏற்ற வகையிலான வாகனத்தினையே கேட்டிருந்தோம்.
ஆனால் ஒரு சில ஊடகங்கள், நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றோம். சொகுசு வாகனத்தில் திரிகின்றோம் என்று தவறான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே ஊடகம் என்பது நடுநிலைமையாக செயல்பட வேண்டும். நாங்கள் எப்பவுமே ஊடகங்களை மதிக்கின்றோம். ஒரு ஊடகம் சுயாதீனமாக செய்திகளை பகிர வேண்டும். அதை தவிர்த்து எங்களிடத்தில் தான் எல்லாம் இருக்கிறது என செயற்படுகின்றன.
வவுனியாவிலே எங்களுடைய சபை மட்டுமா இருக்கின்றது? எத்தனை சபை இருக்கின்றது? அத்தனை சபைகளிலும் பிரச்சனை இல்லையா? அதனை ஆதாரத்துடன் நான் நிரூபிப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.
அதேபோன்று இங்கே நடக்கின்ற அனைத்து வேலைகளும் நாங்கள் பகிரங்கமாகவும் சரியாகவும் செய்து கொண்டிருக்கின்றோம். நான் இங்கே 25,000 ரூபாய் காசுக்கு உழைத்துக் கொண்டு போவதற்காக வரவில்லை.
நான் மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தான் வந்தேன். நான் இங்கே வருவதற்கு முன் எங்களுடைய அறக்கட்டளை ஊடாக நிறைய சேவைகளை செய்து கொண்டிருந்தேன்.
உதாரணமாக, என்னுடைய சொந்த காணிக்குள் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான முன்பள்ளி ஒன்றை கட்டி வருகின்றேன். ஐந்தாம் திகதி அதனை பிரம்மாண்டமாக திறந்து வைக்க இருக்கின்றோம்.
இதேவேளை நாங்கள் வருவதற்கு முன்னர் சபையினுடைய வருமானம் 86 மில்லியனாக இருந்தது. 2026 ஆம் ஆண்டில் 113 மில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்பார்க்கின்றோம்.
தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் நேரடியாக என்னுடன் பேசுங்கள், தயவு செய்து வவுனியா – தெற்கு தமிழ் பிரதேச சபை என்கின்ற பெயரை இழிவுபடுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.