இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ மற்றும் ‘நிதி செயற்பாட்டு அறிக்கை 2025’ ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று(20/04/2026) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வங்கியின் ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க குறித்த அறிக்கைகளை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஜனாதிபதியிடம் வழங்கினார்.
2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை: கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட கொள்கை ரீதியான மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகளின் பலனாக, 2025ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் அடைந்த முன்னேற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
சவால்களை எதிர்கொள்ளும் திறன்: உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள், வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் 2025 பிற்பகுதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டுப் பொருளாதாரம் தனது தாங்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
முதலீட்டு நம்பிக்கை: பொருளாதாரக் கொள்கைகளில் காணப்பட்ட ஸ்திரத்தன்மை காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.