இணையவழித் தாக்கல் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.
முதலில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 30ஆம் திகதிக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய போதிலும், டிசம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு அபராதம், இயல்புநிலை மதிப்பீடுகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் எவையும் விதிக்கப்பட மாட்டாது எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் வருமான வரிக்குப் பதிவு செய்தவர்களில், முதன்முறையாக வரி அறிக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பில்’ (RAMIS) அதிக அழுத்தம் ஏற்பட்டதாகவும், இதனால் கட்டமைப்பு நெரிசலும் தாமதங்களும் ஏற்பட்டதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, பல வரி செலுத்துவோரும் அவர்களது பிரதிநிதிகளும் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதுடன், சிலரால் காலக்கெடுவுக்கு முன்னர் அப்பணியை நிறைவு செய்ய முடியாமல் போனது.
இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2026 டிசம்பர் 14ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் XVIIA மற்றும் XVIII ஆகிய அத்தியாயங்களின் கீழ், நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு எதிராக எந்தவொரு அபராதமும் விதிக்கப்பட மாட்டாது; இயல்புநிலை மதிப்பீடுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது; சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கூறியுள்ளது.
காலக்கெடுவுக்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதால், எதிர்கால ஆண்டுகளில் வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி அறிக்கைகளை முடிந்தவரை விரைவாகத் தாக்கல் செய்யுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமான வரி அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிப்பதற்கு, இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.