பொலன்னறுவை, ஹிங்குராங்கொட கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள நிலத்தடி டீசல் சேமிப்புத் தாங்கியில், தவறுதலாக 1,000 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் இறக்கப்பட்டமையினால், அங்கிருந்த எரிபொருள் இருப்பு பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) அதிகாரிகள், நவம்பர் 28ஆம் திகதி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வினைத் தொடர்ந்து, கலப்படமான குறித்த எரிபொருளை மீண்டும் பவுசரில் ஏற்றி, மேலதிக பரிசோதனைகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டீசல் தாங்கியில் 1,000 லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் இறக்கப்பட்டமையினால் பாரிய நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது தற்போது தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், ஹிங்குராங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரே அதன் முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
தற்போதைய நிர்வாகத்தின் கவனயீனம் மற்றும் முறையான செயற்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியமையாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.