யுத்தகாலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமானநிலையங்கள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு திரும்பவிரும்பினால் அவர்கள் இலங்கை தூதரகம் ஊடாக இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
அங்கீகரிக்கப்படாத வகையில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப முயன்றவேளை கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டார்கள்.அவ்வேளை குடியகல்வு திணைக்களம் தனது சட்டங்களுக்கு ஏற்பவே அவ்வாறு செயற்பட்டது.
எனினும் தற்போதைய தீர்மானத்திற்கு அமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீண்டும் வரவிரும்புபவர்கள் அவர்கள் அதனை இலங்கை தூதரகத்திற்கு அறிவித்து தாங்கள் இலங்கை பிரஜைகள் என்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.