கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஒரு சிறந்த சத்திரசிகிச்சை நிபுணரை மருத்துவ உலகம் இழந்தது. அவரது நினைவு, நமது உடல்நலம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
இன்று நம்மில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் (Stress) போன்ற தொற்றா நோய்களும் அவற்றுக்கான ஆபத்துக் காரணிகளும் பெரும் சவாலாக உள்ளன. இவற்றில் பலவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தக் கட்டுப்பாடு மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகள் மூலம் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், உடல்நலம் நன்றாக இருக்கும்போது அதைப் பற்றி அக்கறை செலுத்தாமல் இருப்பதும், நோய் ஏற்பட்ட பின்னரே கவனம் செலுத்துவதும் நம்மில் பலரிடம் காணப்படுகிறது. “வருமுன் காப்போம்” என்ற எண்ணத்தை நாம் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் விதிவிலக்கல்ல. மற்றவர்களின் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளும் நாம், நமது உடல்நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில்,நேற்று யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனைகள் மற்றும் உடல்நல மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டது.