தருமபுரி:
காவிரி பிரச்சனைக்காக, யார் என்ன சொன்னாலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டாயம் கர்நாடகா செல்ல வேண்டும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய பிரேமலதா, “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்து மண்சோறு சாப்பிட்ட பெருமை தேமுதிகவை மட்டுமே சாரும். காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி, வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீரைத் தமிழகத்திற்குக் கர்நாடகா திறந்தே ஆக வேண்டும்” என்று முழங்கினார்.
மேலும் பேசிய அவர், “இன்று சென்னைக்கு ராகுல் காந்தி வந்திருக்கிறார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி வைத்துள்ள நிலையில், கர்நாடகா அரசிடம் பேசித் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டியது உங்கள் கடமை. மேகதாது, காவிரி விவகாரங்கள் பற்றிப் பேச முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதாக இருந்தது. ஆனால், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டாம் என்கிறார். இங்குள்ள பலரும் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், ஆகஸ்ட் 3-ஆம் தேதி நீங்கள் கட்டாயம் கர்நாடகா சென்று தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். சுயநலத்திற்காக மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லும் உங்களால், மக்கள் நலனுக்காகக் கர்நாடகா செல்ல முடியாதா? என்று முதலமைச்சர் விஜய்யைச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேமுதிக முன்னாள் எம்.பி. எல்.கே.சுதீஷ், “முதலமைச்சர் விஜய் அவர்களே, கர்நாடகா போக ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களோடு தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் இருக்கிறோம். அங்கே போய் காவிரி தண்ணீரை வாங்கிட்டு வாங்க. பிறகு ஸ்டைலாக ஆக்ஷன் செய்யுங்கள்; உங்களுக்கு நாங்களே பேனர் வைக்கிறோம்” என்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், “காவிரி உரிமையை மீட்க முதலில் குரல் கொடுத்த இயக்கம் தேமுதிக. முதலமைச்சர் விஜய் அவர்களே, நீங்கள்தான் வேட்டைக்காரன் ஆயிற்றே, கர்நாடகாவை நோக்கி ஓடிப்போய் காவிரியை வாங்கி வர வேண்டியதுதானே” என்று திரைப்பட வசனங்களைக் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசினார்.
#PremalathaVijayakanth #CMVijay #CauveryIssue #DMDK #MekedatuDam #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayaPrabhakaran #PoliticalUpdate #TamilNewsLive