மொஸ்கோ பிராந்தியத்தை இலக்கு வைத்து உக்ரைன் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் நகரின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.
தலைநகரை நோக்கி வந்த 450 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்த மேயர் செர்கே சோபியானின் (Sergei Sobyanin), இதனைத் தங்களால் எதிர்கொள்ளப்பட்ட “மிகவும் பிரம்மாண்டமான” தாக்குதல் என்று குறிப்பிட்டார். இந்தத் தாக்குதல்களில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக அப்பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்தார்.
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் “முக்கிய” எண்ணெய் உற்பத்தி மையம் மற்றும் தளவாட மையம் (logistics site) மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். “போர் இயந்திரத்தைத் தக்கவைக்கும் பில்லியன் கணக்கிலான டாலர்களை” இது பாதித்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், சனிக்கிழமை கிய்வ் (Kyiv) மற்றும் சுமி (Sumy) பிராந்தியங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவும் உக்ரைனும் சமீபகாலமாகத் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், மின் உற்பத்தி, போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய விநியோக தளவாட முனையங்களை இலக்கு வைத்து வருகின்றன.
தாக்குதலின் பாதிப்புகள் மற்றும் இழப்புகள்
-
மொஸ்கோ பிராந்தியம்: சோஃபினோ (Sofyino) பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ட்ரோன் மோதியதில் 44 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்; இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். ஒரேகாவோ-சுயேவோ (Orekhovo-Zuevo) மாவட்டத்தில் ஒரு தனிப்பட்ட வீடு தாக்கப்பட்டதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தலைநகரின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மூன்று முக்கிய பகுதிகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதி மொஸ்கோ பிராந்தியத்தின் எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானதை விநியோகிக்கிறது.
-
விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்: தாக்குதலையடுத்து மொஸ்கோவின் மிகப்பெரிய ஷெரெமெத்யெவோ (Sheremetyevo) விமான நிலையத்தில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையத்தில் அனைத்து வருகைகளும் புறப்பாடுகளும் நிறுத்தப்பட்டு பின்னர் ஞாயிறு காலை வழமைக்குக் கொண்டுவரப்பட்டன.
இந்த மாபெரும் தாக்குதலானது ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்றாவது நாளாக நடைபெற்ற ரஷ்யாவின் பாராளுமன்றத் தேர்தலை “சீர்குலைக்கும் ஒரு முயற்சி” என்று மேயர் சோபியானின் கூறினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல்கள்
சனிக்கிழமையன்று கிய்வ் நகரின் ஃபாஸ்டிவ் (Fastiv) பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் தாய் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும், கிய்வுக்கு வடக்கே உள்ள விஷ்கோரோட் (Vyshhorod) பகுதியில் காயமடைந்த மற்றொரு குழந்தையும் மருத்துவமனையில் உயிரிழந்தது.
வடகிழக்கு சுமி (Sumy) பிராந்தியத்தில் ரஷ்ய ட்ரோன் ஒன்று பயணிகள் கார் மீது மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். கெர்சன் (Kherson) பகுதியில் உள்ள ஒரு மடத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் காயமடைந்தனர்.
எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் கூறியிருந்தபோதிலும், இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு 100% வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்க வழங்கும் தடைகள் சட்டமூலத்தில் வெள்ளிக்கிழமை டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
2022 பெப்ரவரியில் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.