மே 6, 2026 | இரவு 8:21
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்து இலங்கை தனது “கடுமையான கவலையை” வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய முன்னேற்றங்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், முன்னெடுக்கப்பட்டு வரும் அமைதி முயற்சிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் இலங்கை எச்சரித்துள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பிராந்தியத்தில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு என்பது “முதன்மையான கவலைக்குரிய விடயமாக” உள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சகம், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் “உச்சக்கட்ட நிதானத்தை” கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
“பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்திற்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.