சென்னை:
மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நீட் ஒழிப்பு மற்றும் EWS இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தின் வாகன பரப்புரைக்கு இறுதி நேரத்தில் த.வெ.க அரசு அனுமதி மறுத்தது ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் அளிப்பதுதான் சட்டப்பூர்வமான முடிவு என்றாலும், பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு எனக் காரணம் கூறி கர்நாடக அரசு தயங்குவதாகச் சாடினார். கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடலாம் என முதலமைச்சர் விஜய் நினைத்திருக்கலாம், ஆனால் கர்நாடகவில் விவசாயிகளும், கன்னட அமைப்புகளும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் அளிக்கக்கூடாது எனப் போராட்டம் நடத்தி வருவதால், அந்த சந்திப்பு விவகாரத்தில் கர்நாடக அரசு தற்போது பின்வாங்கியுள்ளது. இது முன்கூட்டியே கணிக்கப்பட்ட ஒன்றுதான் என்று திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த முக்கியமான விவகாரத்தில் விவசாயிகளின் உணர்வை மதித்து, காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை த.வெ.க அரசு கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் நிலை குறித்து ஒன்றிய அரசின் காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு எடுத்துச்சென்று குறுவை மற்றும் டெல்டா விவசாயிகளின் குமுறல்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர, நாடாளுமன்றத்தில் மதச்சார்பின்மைக்கு எதிரான வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதாவை பாஜக அரசு அவசரகதியில் திணிப்பதற்கும் அவர் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
#Thirumavalavan #MekedatuDam #TvkGovt #CmVijay #VCK #BmNews #TamilNews #BreakingNewsTN #CauveryIssue #TamilNaduPolitics #DravidarKazhagam #PoliticalUpdate #TamilNewsLive