மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து ஏழு பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, மஹர சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவசரமாக ராகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிலைமையைக் கண்டறிவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலையினுள் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, மஹர சிறைச்சாலைக்கு வெளியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.