சென்னை:
மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் அச்சம்:
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டம் தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும். தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி பெற, ஒன்றிய அமைச்சக அலுவலர்களுடன் கர்நாடக முதலமைச்சரின் சந்திப்பு நடப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழு ஒன்று மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டதாக வெளியாகும் செய்திகள், ஏற்கனவே தவித்து வரும் காவிரி டெல்டா விவசாயிகளின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பூர்வ நடவடிக்கைகள்:
தொடர்ந்து அக்கடிதத்தில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி உள்ளதாகத் தெளிவாக நிரூபிக்கப்படாமல் மேகதாது திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தீர்வு எட்டப்படும் வரை மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கத் தடை கோரித் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 2007-ல் நடுவர் மன்றத்தால், காவிரிப் படுகை, நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவும் தற்போது நிலுவையில் இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைகள்:
மேலும், “கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவது அவசியமானது என்பதால், கர்நாடகா சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதோ, ஆய்வு செய்வதோ முற்றிலும் பொருத்தமற்றது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கருத்திற்கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது திட்டத்திற்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும். மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டத்தைத் தொடர வேண்டாம் என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும்,” என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.