“‘சென்னை:
பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருப்பதை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். “அவர்களே பாம் வைப்பார்களாம், அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம்” என்று அவர் திமுகவைச் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
பிரமாண்ட நூலகம்:
கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களைக் கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த நூலகத்தைக் கடந்த மாதம் 16-ஆம் தேதி தற்போதைய முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் புத்தகங்கள் வாங்க 50 கோடியும், இ-புத்தகங்கள் வாங்க 5 கோடியும் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் முருகன் குற்றச்சாட்டு:
இதற்கிடையில் பெரியார் நூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகங்கள் போலிப் பதிப்பகங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் புத்தகங்களின் முகப்புரைகள் எழுதப்பட்டுள்ளதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. மேலும் அந்தப் புத்தகங்களின் எழுத்தாளர்கள் பெயர்களும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தன. இது குறித்த குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படையாக எழுப்பியதுடன், அரசு இந்தப் புத்தகங்கள் குறித்தும், போலிப் பதிப்பகங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அமைச்சர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் பெரியார் நூலகத்திற்குப் புத்தகம் வாங்கியதில் நடந்த ஊழலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அமைச்சர் கிண்டல்:
எனினும், திமுக இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருவதுடன், லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் இது குறித்துப் புகார் அளித்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “கொள்முதல் ஆர்டரை மாற்ற முடியுமா? கருவூலத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்ற ரிலீஸ் ஆர்டரை மாற்ற முடியுமா? ஆர்டரை மாற்றுவது வேறு, ஆய்வு செய்வது வேறு. எடப்பாடி பழனிசாமி அரசியல் காரணத்திற்காகச் சொல்கிறார். கள்ளநோட்டு அடிப்பது போல, ஏஐ-ஐ பயன்படுத்தி உண்மையான புத்தகத்தில் இருந்து கருத்துகளைத் திருடிப் புத்தகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அறிவுத் திருட்டு? திமுகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பது நகைச்சுவைச் செய்தியில்தான் வர வேண்டும். “அவர்களே பாம் வைப்பார்களாம், அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம்” என்று அவர் திமுகவைச் சரமாரியாக விமர்சித்துள்ளார்.