சென்னை:
கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு கட்டும் அனுமதி வழங்க ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது. ஸ்ரீராம் குழுவின் நிறுவனம் மூலமாக வைத்திலிங்கத்தின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்திற்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதனிடையே, நடப்பாண்டில் ஜனவரியில் திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடிக்க பிப்ரவரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வைத்திலிங்கம் மீதான வழக்கை மீண்டும் தீவிர விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான வைத்திலிங்கம் மீதான இந்த லஞ்ச வழக்கில் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
#Vaithilingam #DVAC #ChennaiCourt #CorruptionCase #TamilNadu #ArapporIyakkam #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #CourtOrder #SriramProperties #PoliticalNews #TamilNewsLive