மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அமைச்சரவை விசேட அனுமதி வழங்கியுள்ளது.
அந்த தீர்மானத்துக்கமைய கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் சந்தை விற்பனை விலையை விடவும் அவற்றின் இறக்குமதி விலை அதிகரிக்குமாயின், அந்த மேலதிகத் தொகையை அரசாங்கமே ஏற்கும்.
அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றுக்காக அதிகபட்சமாக 20 ரூபாய் வரையிலும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக அதிகபட்சமாக 100 ரூபாய் வரையிலும் அரசாங்கம் நேரடியாக எரிபொருள் விநியோகஸ்தர்களுக்குச் செலுத்தும். இதன் மூலம் உலக சந்தையில் விலை அதிகரித்தாலும், உள்நாட்டில் அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படுவது தவிர்க்கப்படும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.