ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க் குடன் (Volker Türk) அண்மையில் (13ஆம் திகதி) ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
ஜெனீவாவில் உள்ள பாலே வில்சன்’ (Palais Wilson) கட்டிடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து தூதுவர் தஸநாயக்க உயர் ஆணையாளருக்கு விளக்கமளித்ததுடன், இருதரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார் என ஜெனவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) ஆகியவற்றுடன் இலங்கை தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கும் என்பதை தூதுவர் தஸநாயக்க இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதற்குப் பதிலளித்த உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இலங்கையின் விளக்கங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் ஊடாக இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.