யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்னும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சடலம் மீட்கப்பட்ட பகுதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் அமைந்திருப்பதால் அங்கேயே மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், அதற்கான அறிக்கை இன்னும் யாழ். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கிடையில், ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாகச் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணி முறையிட்டதைத் தொடர்ந்து, தவறான செய்திகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார். வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.