அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கச் செய்தமை பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். இயந்திரத்திற்குச் சென்றபோதே அங்கு பணம் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர், அந்தப் பணத்தை தனது வசம் வைத்துக் கொள்ளாமல் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், அந்த 15,000 ரூபாய் பணமும் அதன் உண்மையான உரிமையாளரிடம் பாதுகாப்பாகக் கையளிக்கப்பட்டது.
உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வரும் நிலையிலும், கைக்கு கிடைத்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவி மேற்கொண்ட இந்த நேர்மையான செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டைப் பெற்றுள்ளது. இளம் தலைமுறையினருக்கு நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறந்த முன்னுதாரணமாக இந்த மாணவியின் செயல் அமைந்துள்ளது.