இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயரைப் போலியான முறையில் பயன்படுத்தி, மருந்துகளை விற்பனை செய்து வந்த பாரிய மோசடிச் செயலொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த 26ஆம் திகதி இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த நிறுவனம் நீண்டகாலமாக இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தமை நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கண்டறியப்பட்டுள்ளது.
மாவனல்லை – ஹிங்குல பகுதியில் இயங்கி வந்த நிறுவனமொன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பெருமளவிலான மருந்துப் பொருட்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பெயர் மற்றும் அரச இலச்சினை என்பவற்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி, போலித் தயாரிப்புகளை உண்மையான கூட்டுத்தாபனத் தயாரிப்புகள் என நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தசம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.