கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது கனடாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் 2022 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒரு தாயும் அவரின் இரு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். மேற்படி விபத்துக்கான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளமை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மூவர் மரணத்துக்கும் காரணமானவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்துள்ளது.
இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளாகிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.
2022 ஒக்டோபர் 12ம் திகதி மார்க்கம் வீதி எல்சன் வீதி சந்திப்பில் டிரக்கும் காரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்தில் பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் – தாயார் மருத்துவமனையில் கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகிய மூவரது மரணத்திற்குக் காரணமான இந்த விபத்து தொடர்பான வழக்கில் மில்டன் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி வாகனம் செலுத்துவதில் அனுபவமிக்கவர் என்றும் கால நிலை காரணமாக நிலவிய அசாதாரண சூழ்நிலையே விபத்துக்கான காரணம் என்றும் தனது தீர்ப்பு புவனேந்திரனுக்கும் அவருக்காக திரண்டிருந்த மக்களுக்கும் திருப்தி தராது எனவும் அறிவித்தபடி குற்றவாளியை குற்றமற்றவர் என விடுதலை செய்ததோடு அவருக்கு எந்தவிதமான தண்டனையையும் வழங்காது விட்டமை பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியதாக நீதிமன்றத்தில் புவனேந்திரனுக்கு சார்பாக திரண்டிருந்த மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
மூவரின் உயிரிழப்புக்குக் காரணமான வாகன சாரதிக்கு 15 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற விதத்திலேயே மேற்படி வழக்கு தொடர்பான கருத்துக்கள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது குடும்ப அங்கத்தவர்கள் சகலரையும் இழந்த புவனேந்திரன் இன்றைய வழக்குக் குறித்தும் உயிரிழந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக தன்னுடன் இணையுமாறும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார். நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளுக்காகத் தனித்தே நீதிமன்றம் சென்று வந்தமையையும் தாயகம் சார் நலன்களுக்காக தான் செயற்பட்ட விடயங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார்.
இன்றைய தினம் (17) விபத்தில் பலியாகிய தனது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் எனவும் தன்னோடு வந்து இணையுமாறும் அழைத்த அவரின் அழைப்புக்காகவே பெருந்திரளானோர் நீதிமன்றில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மேற்படி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனேடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இதற்காக குரல்கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.