தலைமன்னார் – மன்னார் பிரதான வீதியின் கீளியன் குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கி இராணுவத்தினர் பயணித்த டிபென்டர் (Defender) ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கீளியன் குடியிருப்பு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற வேளையில் வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய 11 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் பகுதிக்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர், வைத்தியசாலைக்கு நேரில் சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களின் நலன் விசாரித்ததுடன், உயிரிழந்த வீரரின் உடலையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது