ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உணவக முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய அன்பழகன் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கும் உணவக முகாமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. முகாமையாளர் தாக்கியதில் படுகாயமடைந்த அன்பழகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் குறித்த உணவகத்தின் முகாமையாளரை தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மகன் இது குறித்துத் தெரிவிக்கையில், “தந்தை உணவை வாங்கிக்கொண்டு வெளியேற முற்பட்ட போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது குடும்பத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அன்பழகனின் இறுதிச்சடங்கு நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது, திரண்டிருந்த மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு, குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மதுபானசாலையினால் இவ்வாறான வன்முறைகள் தொடர்வதாகக் கண்டனம் வெளியிட்டவாறே அன்னாரது உடல் நுவரெலியா மாநகர சபைக்குச் சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.