மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று வியாழக்கிழமை (08.10.2026) முன்னெடுக்கப்பட்டது.
எதிர்காலத்தைச் சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கிய பிரதேச செயலரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டது. தெல்லிப்பழைச் சந்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணி, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.
மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கோரும் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு, மதுபானசாலை அனுமதிக்கு எதிரான தமது கண்டனத்தைத் தீவிரமாக வெளிப்படுத்தினர்.
வலி. வடக்கின் சமூகச் சூழலையும் மக்களின் நலனையும் கருத்திற்கொண்டு, மதுபானசாலை அனுமதி வழங்கும் தீர்மானத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.