2017ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது, சட்டத்தரணி ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எப்.யு. வுட்லர் அச்சட்டத்தரணிக்கு தனிப்பட்ட ரீதியில் 60 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டது.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய போது, மனுதாரரான சட்டத்தரணி பிரியலால் சிறிசேன தனது சேவைபெருநர் ஒருவர் சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த தொழில்சார் கடமைகளில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் சட்டவிரோதமாக தலையிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன், அதே பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான மதுஷங்க டயஸ் என்பவரையும் மனுதாரரின் உரிமைகளை மீறியமைக்காக 30 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்விரு பிரதிவாதிகளும் தலா 10 ஆயிரம் ரூபாவை வழக்குச் செலவாக செலுத்த வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளனர்.
நீதியரசர் ஜனக டி சில்வா வழங்கிய இந்தத் தீர்ப்பை நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க வழிமொழிந்தார். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது, தனது சேவைபெருநர் சார்பாக முன்னிலையாகுவதற்கு குறித்த இரு அதிகாரிகளும் தமக்குத் தடையாக இருந்ததாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இத்தீர்ப்பில் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார். பொலிஸ் விசாரணையின் போது ஒரு அறையிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டமையினால் மாத்திரம் ஒரு சட்டத்தரணியின் தொழில்சார் உரிமை மீறப்பட்டதாக தான் கருதவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேன மன்றில் முன்னியாகிய, பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் மனுதாரர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ் முன்னிலையானதுடன், சட்டமா அதிபர் சார்பாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜீவ் குணதிலக்க முன்னிலையானார்.