மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரி-56 (T-56) ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) குறித்த வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறைச்சாலையிலிருந்து காணொளித் தொழில்நுட்பம் (Video Technology) ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லடிப் பகுதியில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினர் (CID) உத்தியோகபூர்வமாகக் கைது செய்தனர்.
தொடர்ந்து, பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரு தகவலாளிகள் மற்றும் லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜூன் 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்