தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான முறைப்பாடுகளை பதிவு செய்து மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் அதே பிரதேச சபை உறுப்பினர் யோகராசா சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சந்திரகுமார் இன்று (04.03.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துக்க அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வீதிகளில் உள்ள மின் குமிழ்களை நான் திருடியதாக மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேசசபையின் தவிசாளரினால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதனால் தவிசாளர் தொடர்ந்தும் என்னை அச்சுறுத்தி வருவதுடன் தற்பொழுது பொய்யான முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன் “இருந்த இடமே இல்லாமல் செய்வேன்” என அண்மையில் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.
அதேபோல் சக பிரதேச சபை உறுப்பினர் கிருஸ்ணப்பிள்ளை வதனகுமார் மீதும் அண்மையில் பொய்யான முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
என்மீதான பொய்யான முறைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலுக்கும் காரணம் தற்பொழுது பிரதேச சபை அதிகாரமானது தோல்வியில் சென்று கொண்டிருக்கின்றமையே.
தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் தனது ஊருக்கு அதிக நிதியினை ஒதுக்குதல் போன்ற காரணங்களினால் தவிசாளரால் கொண்டு வரப்படுகின்ற திட்டங்களை சபையில் நிறைவேற்ற முடியாமல் தோல்வியில் முடிவதுடன் மாதாந்த வரவு செலவு திட்டங்களைக்கூட சபையில் நிறைவேற்ற முடியாமல் போகின்றன.
இதனால் உறுப்பினர்களை அச்சுறுத்தி தனக்கு அடிபணிய வைக்க முயற்சிக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.