வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தென்கிழக்கு பரி (Barrie) பகுதியில் உள்ள வீடொன்று ‘கணிசமான அளவில்’ சேதமடைந்துள்ளதாக பரி தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவைகள் (Barrie Fire and Emergency Services) தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு சற்று முன்னதாக, ‘ஹர்ஸ்ட் டிரைவ்’ (Hurst Drive) பகுதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பல ‘911’ அவசர அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை CTV News செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
துணைத் தீயணைப்புப் படைத் தலைவர் எரிக் மெக்ஃபேடனின் (Eric MacFadden) கூற்றுப்படி, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் 20 க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டடத்தில் ஏற்பட்ட இத்தீ விபத்து முதலில் “கராஜை (வாகன தரிப்பிடம்) முற்றாகச் சூழ்ந்து”, பின்னர் வீட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக மெக்ஃபேடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஒற்றை அடுக்கு பங்களா (one story bungalow) டைப் வீடு இத்தீ விபத்தினால் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரி தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து இன்னும் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ளாததால், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், இதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த சேத விபரங்களின் மதிப்பீடும் இதுவரை கணக்கிடப்படவில்லை என மெக்ஃபேடன் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த தீ எச்சரிக்கை அலாரங்கள் (fire alarms) முறையாக இயங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வீட்டிலிருந்த குடியிருப்பாளர்களும் அவர்களின் செல்லப் பிராணியான நாயும் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறியதால், எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனப் பதிவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டதாக பரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலை 6:30 மணியளவில் தீ முற்றாக அணைக்கப்பட்டதாக பரி தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.