பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எவ்விதமாக வெளிப்படையான கலந்துரையாடல்களுமின்றியே அரசாங்கம் இவ்வாறான சட்டமூலங்களை இயற்றுகிறது.இது சட்டமானால் மனித உரிமைகள்,ஜனநாயகம் முழுமையாக இல்லாதொழியும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாகவும், அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்ற போவதில்லை என்றும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தது.
நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் காணப்படுகின்றன.இந்த சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதற்கு கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் அவை வெற்றிப்பெறவில்லை.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு நீண்;டதொரு, பரந்துப்பட்ட வகையில் வரைவிலக்கணம் அளிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் எண்ணும் அனைத்தும் பயங்கரவாதமாக கருதப்படும். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதுவும் பயங்கரவாதமாகவே கருதப்படும்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முப்படையினருக்கும் வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை பாரதூரமானது. முப்படையினருக்கு சிவில் மக்கள் சார்ந்த அதிகாரங்களை கையளிப்பது ஏற்புடையதல்ல,
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து, அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் வெளிப்படையான வகையில் முன்னெடுக்கவி;லலை. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை எவ்வாறு கொண்டு வந்ததோ, அதேபோன்று தான் இந்த சட்டமூலமும் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சட்டமூலம் சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் முற்றாக இல்லாதொழியும்.
மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வரவில்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்க முடியாது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்குப்படுத்தி சட்டங்கள் இயற்றப்படும் போது மக்களின் குரலே ஒடுக்கப்படும்.அப்போது பேச்சுரிமை தடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சியே தொடரும். இந்த அரசாங்கம் அந்த பாதையில் தான் பயணிக்கிறது என்றார்.