பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வளமான நாடு- அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்துள்ளோம். அந்த வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் பரிந்துரைகளுக்கு அமைவாக விரைவில் சட்டமூலம் வெளியிடப்படும்.
இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றார்.