யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் விவகாரத்தில், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் அவர்களுக்கும் பலாலி காவற்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் சொத்தான “பவானி” வீதியை மீட்பதற்கான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு காவற்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தவிசாளர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
பிரதேச சபை தவிசாளர் அடாத்தாகத் தனது விகாரையின் வேலியை அகற்றப் போவதாக விகாராதிபதி பலாலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பாக தவிசாளரைப் பலாலி காவற்துறை நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், “இந்த வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும்” எனக் கூறி, நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தால் தவிசாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த வீதி வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்துப் பூர்வீக ஆவணங்களும் சபையிடம் உள்ளன. சட்டத்தை எதிர்நோக்கத் தயார்: “எமக்கு எதிராக வழக்குத் தொடருங்கள், அதனை நீதிமன்றில் எதிர்கொள்ளத் தயார்” என கா தவிசாளர் சுகிர்தன் பதிலளித்துள்ளார்:
எதிர்வரும் மே 11-ஆம் திகதிக்குள் விகாராதிபதி தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றாவிடின், மே 12-ஆம் திகதி பிரதேச சபையினால் அந்த வேலிகள் அகற்றப்பட்டு வீதி மீட்கப்படும் என்பதில் தவிசாளர் உறுதியாக உள்ளார்.
கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி தையிட்டியில் நில அளவீடு நடைபெற்ற போது இரு வேறு நிலைப்பாடுகள் வெளிப்பட்டன:
மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களின் கோரிக்கையை “நியாயமற்றது” எனக் கூறி நில அளவீட்டைக் கைவிட்டார்.
பிரதேச சபை தவிசாளர் அந்தச் சூழலிலும் சபைக்குச் சொந்தமான வீதியை அடையாளம் காட்டி அதனை அளவீடு செய்தார்.
தற்போது மாவட்ட நிர்வாகம் ஒரு பக்கமும், பிரதேச சபை நிர்வாகம் மற்றும் காணி உரிமையாளர்கள் மறுபக்கமும் உள்ள நிலையில், காவற்துறை விகாரை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.