அதிகரித்து வரும் வரிச்சுமையால் நாட்டின் திறமையான பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களுக்கு மேலதிக வரி நிவாரணங்களை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
2021/2022 ஆம் ஆண்டிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இதற்கு அதிக வரியே முக்கிய காரணம் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட வரித்திருத்தங்களால் தொழில்வல்லுநர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் தனிநபர் வருமான வரி அமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய பொருளாதார அழுத்தங்களுடன் ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட நிவாரணம் போதுமானதாக இல்லை என சங்கம் தெரிவித்தது.
சில தொழில்வல்லுநர்கள் இன்னும் தமது வருமானத்தில் சுமார் 36% நேரடி வரியாகச் செலுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பல வருடங்களாக திருத்தப்படவில்லை என்றும், கூடுதல் பணி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானம் 5.4 டிரில்லியன் ரூபாவைக் கடந்துள்ள நிலையில், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் GMOA கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது.
திறமையான வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறினால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் எச்சரித்துள்ளது.