மதுரை
நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாகக் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.பி.உதயகுமாரின் சர்ச்சை பேச்சு:
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அதிமுகவை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாகப் போகும். மேலும் காவிரி தண்ணீரைப் பற்றிப் பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்,” என முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை இணைத்து அவதூறாகப் பேசினார்.
போலீசில் தவெக நிர்வாகி புகார்:
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தவெக நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பரபரப்பு கண்டன போஸ்டர்கள்:
இந்தச் சூழலில், நடிகை திரிஷா குறித்த ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், “இருவரின் நட்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. ‘யாகாவார் ஆயினும் நாகாக்க’ என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு. முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “எங்கள் அன்பு அக்கா திரிஷாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்,” என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Trisha #ActressTrisha #RBUdhayakumar #Madurai #ThalapathyVijay #ChiefMinisterVijay #TVKGovernment #TNPolitics #AIADMK #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates