யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தையிட்டியில் உள்ள தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள் எனக் குற்றம்சாட்டி வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு எதிராகப் பலாலி காவற்துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துக் கட்டளையிட்டார்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமையும் குறித்த விகாரைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மற்றுமொரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்த வழக்கும் ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை உள்ளடக்கிய பகுதியில் பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டமைக்கு எதிராகத் தமிழ் தேசியக் கட்சிகள், மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களினால் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.