2016 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் உள்ள திக்கம் வடிசாலை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் சூழ்ந்துள்ள சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்த்து, மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், திக்கம் கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகளும் வடிசாலையை இயக்கும் உரிமையைப் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குத் தடையாக உள்ள சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், உள்ளூர் மக்களின் நலன்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் விரைவான தீர்வொன்றை எட்டுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
முன்னைய ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட தீர்க்கப்படாத சட்டச் சிக்கல்களே இன்றளவும் வடிசாலையின் செயற்பாட்டை பாதித்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு பொறுப்புடன் முகங்கொடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து சட்டத் தடைகளை விரைவாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.