தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தவெக-வில் இணைந்த 8 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கடந்த ஜூன் 6-ம் தேதி, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தவெக ஆளுங்கட்சியாக மாறிய பிறகு, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முன்னாள் எம்எல்ஏ-க்களும் விஜய் தலைமையிலான தவெக-வை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோவிந்தசாமியின் இணைப்பும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், அவர் இணைந்த அடுத்த சில நாட்களிலேயே, அதிமுகவில் உட்கட்சிப் பூசல் இருந்த காலகட்டத்தில், \”என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம், நான் எந்தக் கட்சிக்கும் போகமாட்டேன்\” என்று அவர் பேசிய பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவின. இந்த வீடியோக்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சூழலில் தான், அவர் திடீரென அரசியலில் இருந்தே விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். \”கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு இயக்கத்திற்குச் சென்றேன். தற்பொழுது மனமும் உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் இன்று முதல் அரசியலில் இருந்தே விலகிக்கொள்கிறேன். நான் எந்த இயக்கத்திலும் இல்லை\” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த இவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தவெக-வில் இணைந்த குறுகிய காலத்திலேயே அரசியலைவிட்டே விலகியது தருமபுரி மாவட்ட அதிமுக மற்றும் தவெக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
#Govindasamy #ExMLA #Dharmapuri #Papireddipatti #TVK #ADMK #Politics #Vijay #ThalapathyVijay #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #TvkUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #TvkGovernment #PoliticalNews #TamilNaduNews #Politics2026 #ExMlaGovindasamy #TvkJoining #TamilPolitics