சென்னை:
சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்:
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகப் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து போரூர் மெட்ரோ நிலையத்தில் ரூ.750 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 14.6 கி.மீ தொலைவிலான பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
டிக்கெட் மற்றும் பயணம்:
பிரதமர் மோடி யுபிஐ மூலம் பணம் செலுத்தித் டிக்கெட்டைப் பெற்றார். தொடர்ந்து போரூர் முதல் பூந்தமல்லி வரை பிரதமரும், முதலமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்ததுடன், பயணத்தின் போது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர். முதற்கட்டமாக இந்தத் தடத்தில் 11 நிலையங்களில் மெட்ரோ நின்று செல்லும்; இதற்கான கட்டணம் ரூ.10 முதல் ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்:
மேலும் ரூ.3,700 கோடி மதிப்பிலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், ரூ.750 கோடி மதிப்பிலான ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். சென்னை துறைமுகத்தில் நான்கு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
#PMModi #CMVijay #ChennaiMetro #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive