சென்னை:
தவெகவின் சமூக ஊடகப் பிரிவினர் தன்னைத் தவறாகச் சித்தரித்து விடியோ வெளியிடுவதாகச் சென்னை மேயர் ஆர்.பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னணி:
சென்னையில் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்போது மேடையில் இருந்த மேயர் பிரியா சிரிக்கும் விடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தவெகவினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து மேயர் பிரியா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏஐ மூலம் தவறான விடியோ:
இந்த நிலையில் மேயர் பிரியா வெளியிட்டுள்ள விடியோவில், நான் மேடைகளில் தவெக அரசையும், நிர்வாகச் சீர்கேட்டையும் கண்டித்துப் பேசும்போதெல்லாம், அதற்கு மறுநாளே விர்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய விர்சுவல் அப்யூசர்கள் என்னைத் தவறாகச் சித்தரித்து விடியோ வெளியிடுகிறார்கள். திமுகவில் இருப்பவர்களுடன் என்னை ஏஐ மூலம் தவறாகச் சித்தரிக்கிறார்கள். இதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றும் மீண்டும் புகார் அளித்துள்ளேன். இதன் மீதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாய் திறக்கவில்லை:
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தவெக பேசுகிறது. மேயராகவும், ஒரு பெண்ணாகவும் இருக்கும் நான் இது தொடர்பாகப் பலமுறை பேசியும் முதலமைச்சர் வாய் திறக்காமல் இருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாகப் பெண்கள் வளர்ச்சிக்கான ஆட்சியை நடத்தினார், இன்று பல பெண்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் பெண்கள் பாதுகாப்பு எனக் கூறிவிட்டு, விர்சுவல் வாரியர்ஸ் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ளனர். மாநகராட்சி உறுப்பினர் மேடையில் பேசியபோது, அதே மேடையில் இருந்த கனிமொழியும், சேகர்பாபுவும் கண்டித்தனர். இதுபோன்று ஒரு இடத்திலாவது முதலமைச்சரோ, அமைச்சரோ கண்டித்த தகவல் இருக்கிறதா? பெண்களைத் தவறாகப் பேசிச் சித்தரிக்கும் தவெக அரசைக் கண்டிக்கிறேன் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
#MayorPriya #DMK #TVK #VirtualWarriors #WomenSafety #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive