தருமபுரி:
தமிழக அரசியலில் இருந்து தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அமமுகவினருக்கு அடையாள அட்டை:
தருமபுரி அதிமுக அலுவலகத்தில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கிய கே.பி.முனுசாமி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செங்கோட்டையனுக்குத் தகுதியில்லை:
திமுகவை ஆதரிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகச் செங்கோட்டையன் கூறியது குறித்த கேள்விக்கு, செங்கோட்டையனை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது எந்தக் கட்சி? அவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்த அதிமுகவையே அவர் விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு அதிமுகவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா? பதவிக்காகக் கட்சி மாறியிருக்கிறார். திராவிடக் கட்சிகளைப் பற்றிப் பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தொண்டர்கள் ஒற்றுமையே பலம்:
தனுஷுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் குறித்த கேள்விக்கு, சோஷியல் மீடியாவில் ஏமாற்றித்தான் ஜோசப் விஜய் முதலமைச்சரானார், முழுமையான தகவல் தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்றார். டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, அதிமுக மிகப்பெரிய இயக்கம். ஆட்சியில் இருக்கும்போது அணிவகுத்து நின்றார்கள், ஆட்சி போனவுடன் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதிமுக தொண்டன் கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு இயக்கத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறான். தலைவர்களையே வழிநடத்தக்கூடிய தொண்டர்கள் உள்ள இயக்கம் அதிமுக. இவர்கள் வந்தால்தான் கட்சி வலிமை பெறும் என்பது கிடையாது. தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்தாலே அதிமுக வலிமை பெறும் என்று கூறினார்.
தவெக காணாமல் போகும்:
பத்து வருடங்களாகப் பல கட்சிகளுக்குச் சென்ற ஆதவ் அர்ஜுனா, அதிமுகவுக்கு வந்தார், நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கத்தை விமர்சிக்க அவருக்குத் தகுதி இல்லை. இடைத்தேர்தலில் மூன்றாம் இடம், நான்காம் இடம் என்பதெல்லாம் கேள்வி கிடையாது, திமுக டெபாசிட் கூட இழந்திருக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளையும் அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது. தவெக ரொம்ப சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று கே.பி.முனுசாமி காட்டமாகத் தெரிவித்தார்.
#KPMunusamy #AIADMK #Sengottaiyan #TVK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive