பட மாளிகையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படைப்புகளுக்கு நிகராக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படைப்புகளை பார்த்து பாராட்டும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக மின்னும் நடிகர்களும் இணைய தொடர்களில் நடிப்பதற்கு முன்னுரிமையும் , முக்கியத்துவமும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டானாக நடித்திருக்கும் இணைய தொடர் – ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியாகிறது.
இயக்குநர் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், விஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், அபி நட்சத்திரா, வடிவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சண்முகசுந்தரம் மற்றும் மது நீலகண்டன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாரான தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.
இதனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் இணைய தொடர் குழுவினர் பங்கு பற்றிய விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘முத்து என்கிற காட்டான்’ இணைய தொடரின் மூல சிந்தனையை உருவாக்கிய இயக்குநர் மணிகண்டன் ..தவிர்க்க இயலாத பயணத்தில் இருப்பதால் .. அவரைத் தவிர ஏனையோர் பங்கு பற்றினர்.
இணைய தொடருக்கான கதையை எழுதிய கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், ” இந்த இணைய தொடருக்காக மணிகண்டன் உருவாக்கிய மூல கரு சிறப்பானதாக இருந்தது. அது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம் என்பதால்… அதனை விரிவாக விவாதிக்க தொடங்கினோம். ஒருவனுடைய தலை கிடைத்துவிட்டது. ஆனால் அவனது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா? கொள்ளைக்காரனா? என்பதை காவல்துறையினர் விசாரிப்பது போல் தொடரை எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்களுடன் உருவாக்கினோம்.