சென்னை
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் வாடிக்கையாளர்கள் இனி நேரடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது! பல ஆண்டுகளாகவே இருந்து வரும் ’10 ரூபாய் கூடுதல் வசூல்’ பிரச்சனைக்கு இந்த உத்தரவு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30 டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும், இதன் மூலம் ஆண்டுக்குக் பல கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 07) நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ‘கூடுதல் விலை வசூலிக்கக் கூடாது என்றும், வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்றும் கண்டிப்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக’ விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தனது அதிரடித் தீர்ப்பில், “மதுபானங்களுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால், வாடிக்கையாளர்கள் தயங்காமல் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்கக் கூட்டம் அதிகமுள்ள டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பிற்காக ஒரு காவல் துறை அதிகாரியைப் பணியமர்த்தலாம்” என அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
#TASMAC #MadrasHighCourt #LiquorPrice #TNPolice #TasmacScam #TamilNaduNews #Chennai #ViralNews #TrendingTN #LatestNewsTN #TamilNews #TASMACUpdates #TNPolitics