ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தனது நூலொன்றை வெளியிட்ட பின்னர் உரையாற்றியவேளை ஞானசார தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
அவர் நூல்வெளியீட்டில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது
மேல்நீதிமன்றம் எனக்கு முன்னர் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் பின்னர் எனது எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத நிலையில் நான் இருக்கின்றேன்.
எனது தலைவிதி எழுதி முடிக்கப்பட்டுவிட்டதா என்பது எனக்கு தெரியாது,ஆனால் நான் அச்சமடையவில்லை,நாட்டின் சட்டங்களை அனைவரும் மதிக்கவேண்டும்,நான் சட்டத்திற்கு தலைவணங்குவேன்,
எனக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விடயத்தில் அதிகாரிகள் இழைத்த செயல்முறை தவறுகளுக்கான விளைவுகளை நான் ஏன் அனுபவிக்கவேண்டும்? அதிகாரிகள் தவறிழைத்தால் என்னை ஏன் தண்டிக்கவேண்டும்?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் இழைக்கப்பட்ட செயல்முறை தவறுகளை தற்போதைய ஜனாதிபதி திருத்தலாம்.
எனக்கு புதிய பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என சிரேஸ்ட பௌத்த மத தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்