செயின்ட் ஆல்பர்ட் (St. Albert) பகுதியில் இனவெறி வசவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மே மாதம் 1-ஆம் திகதி மதியம் 2:30 மணியளவில் பொய்ரியர் அவென்யூ (Poirier Avenue) மற்றும் பார்க்வுட் டிரைவ் (Parkwood Drive) பகுதியில் தாக்குதல் ஒன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு (RCMP) பல அழைப்புகள் கிடைத்தன. சாட்சிகள் வழங்கிய சந்தேக நபர் மற்றும் வாகனத்தின் விபரங்களை வைத்து, செயின்ட் ஆல்பர்ட் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிம் நபர் என்று எட்மண்டன் முஸ்லிம் சமூகத்தின் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் 8-ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளார்.
தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இனவெறி வசவுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக ஆவணங்களை அல்பர்ட்டா நீதித்துறை வழக்கறிஞர் ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
“எந்த வகையான இனவாதத்திற்கும் எமது சமூகத்தில் இடமில்லை. இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. இருப்பினும், செயின்ட் ஆல்பர்ட் நகரம் பாதுகாப்பான மற்றும் அனைவரையும் வரவேற்கக்கூடிய, இரக்கமுள்ள மக்கள் வாழும் இடமாகும்,” என்று செயின்ட் ஆல்பர்ட் RCMP இன்ஸ்பெக்டர் ஆரோன் ஒயிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிக விபரங்கள் அல்லது காணொளிகள் யாரிடமாவது இருந்தால், செயின்ட் ஆல்பர்ட் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.