புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை சுற்றுவட்டத்தில், தீவகத்தின் பிரதான அடையாளங்களுள் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மாற்றாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பொதுவான அடையாளம் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியமையால் சபை அமர்வில் கடும் குழப்பமும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலையை வைப்பது தொடர்பில் சபையின் உறுப்பினர் சிவகுமாரனால் உத்தியோகபூர்வ முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டு தமது கருத்துக்களை முன்வைத்த போது, மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ள புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த சுற்றுவட்டத்தில், தீவகத்தின் வரலாற்று பெருமைமிக்க அடையாளமான நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையே வைக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
எனினும், இந்த விவாதத்தின் போது சபையில் பிரசன்னமாகியிருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இந்த முன்மொழிவுக்கு தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.
“நயினாதீவு என்பது ஒரு சர்வதேச சுற்றுலாத் தலம் மற்றும் வழிபாட்டிடம். இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்தை மட்டும் காட்சிப்படுத்துவது பொருத்தமற்றது. குறிப்பாக, நயினாதீவில் நான்கு மதங்களைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அங்கு நான்கு மதங்களின் அடையாளங்களையும் உள்ளடக்கிய அல்லது ஓட்டுமொத்த தீவகத்துக்கும் பொதுவானதொரு சின்னத்தை வைப்பதே சிறந்தது” என்று அவர்கள் சபையில் வாதிட்டனர்.
தேசியமக்கள்சக்தி உறுப்பினர்களின் இந்த மாறுபட்ட கருத்தால், சினமடைந்த ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையே சபையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, சபை அமர்வில் பெரும் குழப்ப நிலை நிலவியது.
இருப்பினும், இறுதி விவாதத்தின் போது சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் சிலையே அங்கு வைக்கப்பட வேண்டும் என்று தங்களின் உறுதியான நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்களின்றி நின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த தீர்மானம் வேலணை பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடுத்து, குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலையை நிறுவுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் சபையில் தெரிவித்தார்.