தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறித்து, கடந்த புதன்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்த விசாரணைகளில், உயிரிழந்தவர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என்பதும், அவர் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், சடலம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியவர் குறித்த பெண்ணின் காதலர் என நம்பப்படுவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இவ் மரணம் ஒரு கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நிகழ்ந்ததா என்பதைக் கண்டறிவதற்காக, நுவரெலியா பொலிஸாரின் கீழ் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.