டொராண்டோ, ஜூலை 22: கனடாவின் ‘நியூ டெகம்செத்’ (New Tecumseth) பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரது ஆடைக்குக் கீழ் இரகசியமாக ஒளிப்படம் (Upskirt photo) எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 30 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 4:30 மணியளவில் அலிஸ்டன் (Alliston) பகுதியில் அமைந்துள்ள கடையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாணப் பொலிஸாருக்கு (OPP) அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
சம்பவத்தன்று குறித்த நபர், தனக்கு அறிமுகமில்லாத பெண் ஒருவரைப் பலசரக்குக் கடைக்குள் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து சென்று, அப்பெண்ணுக்குத் தெரியாமல் ஆடைக்குக் கீழ் தனது அலைபேசி மூலம் இரகசியமாகப் படம் பிடித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டுகள் மற்றும் எச்சரிக்கை:
கைது செய்யப்பட்ட ‘பெட்டவாவா’ (Petawawa) பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபருக்கு எதிராக ‘மறைந்திருந்து பிறரின் அந்தரங்கத்தைப் பார்த்தல்/படம் பிடித்தல்’ (Voyeurism) மற்றும் ‘குற்றவியல் துன்புறுத்தல்’ (Criminal harassment) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரால மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், இவரால் பாதிக்கப்பட்ட வேறு எவரேனும் இருப்பின் அல்லது இது குறித்த தகவல்கள் தெரிந்திருப்பின் உடனடியாக ‘நோட்டவாசகா’ பிரிவு பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்