இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு (Economic policy framework) முன்னெப்போதையும் விட மிகவும் உறுதியான மற்றும் வலுவான நிலையில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபகோர்ஜியோ (Evan Papageorgiou) வியாழக்கிழமை (21) தெரிவித்துள்ளார்.
நாட்டின் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF – Extended Fund Facility) திட்டத்தின் கீழ், ஐந்து மற்றும் ஆறாவது உத்தியோகபூர்வ மறுாய்வுகளை (Fifth and Sixth Reviews) சர்வதேச நாணய நிதியத்தின் நாணயச் சபை எதிர்வரும் மே 27 ஆம் திகதி புதன்கிழமை அன்று பரிசீலிக்கவுள்ள பின்னணியிலேயே அவர் இந்தச் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
“இலங்கையின் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ள பாபகோர்ஜியோ, “கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் தற்போதைய கொள்கை கட்டமைப்பு கணிசமான அளவில் வலுவடைந்துள்ளது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை குறித்த ஒரு முக்கியமான தருணத்தில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இந்த உத்தியோகபூர்வக் கண்ணோட்டமானது, இலங்கையின் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மை (Macro stability), வெளிநாட்டு கையிருப்பு மீளக் கட்டியெழுப்பப்படல் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், நாட்டின் தொடர்ச்சியான சர்வதேச நிதி உதவிக்கு வழிவகுக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகச் சபையின் (Executive Board) இந்த வரவிருக்கும் தீர்மானத்தின் மூலம், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆறாவது மற்றும் ஏழாவது நிதிக் தவணைகள் (Tranches) விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இலங்கையின் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும், வெளிநாட்டு கையிருப்புகளை மீண்டும் அதிகரிப்பதிலும் தற்போதைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள அண்மைக்கால முன்னேற்றங்களைப் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் (Stakeholders) அனைவரும் அங்கீகரித்துள்ளதாக இவான் பாபகோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய பொருளாதார அதிர்வுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் புதிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்ற போதிலும், வலுவான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதன் காரணமாக இலங்கை இந்த சவால்களை மிகவும் சீரான முறையில் எதிர்கொள்ளக்கூடிய தகைமையைப் பெற்றுள்ளதாக நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ள பாபகோர்ஜியோ, அதேநேரம் கொள்கை நிலைத்தன்மையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். “இதுவரை எட்டப்பட்டுள்ள பொருளாதார வெற்றிகளைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கு, நிலையான கொள்கை வழிமுறையைப் பேணுவதும், மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரம் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள அனுமதிப்பதும் மிக முக்கியமாகும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“இலங்கையின் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் முன்னோக்கி நகர்கின்ற நிலையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்தும் நெருக்கமான கூட்டுறவைப்பேண நாங்கள் ஆவலுடன் உள்ளோம்” எனக் குறிப்பிட்டு இவான் பாபகோர்ஜியோ தனது உத்தியோகபூர்வ அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.